• நெஞ்சோடு நீ

    உன் விழிகளில் விழுந்து விண்மீனுக்கு தூண்டிலிட்டுக் கொண்டிருப்பது நான்தானடி...

  • எச்சில் நட்சத்திரங்கள்

    மீண்டும் ஒரு முறைதும்மி விடாதே அழகேஉன் எச்சில் துளிகளைநட்சத்திரங்களாக அடுக்கிவைக்கஎன்னால் இன்னுமொரு வானம்செய்து தர முடியாது.

  • வெரலோரம் நீ கசிய

    கண்டபடி கலஞ்சு போட்டே விழிக ரெண்டும் வெசாலமாச்சே புரியாம பொறிவச்சு புதினமெல்லாம் அந்துபோச்சே

Showing posts with label என்னுடன். Show all posts

விஞ்ஞானக் கற்கள்

0 comments
விஞ்ஞானக் கற்கள்



ஒவ்வொரு இரத்த சரித்திரத்திலும்
இரண்டாய் பிளக்கப்பட்டது நான்
நான் மட்டும்தான்..
காட்டுயானைகளுக்கு கால்த்தடம்
பதிக்கவல்லவா இதயங்களில்
இரும்புத் தொட்டிகள் செய்தேன் ..

பற்றி எரியும் நெருப்பிலே
படுக்கையறைகள் செய்வதும்..
சொட்டுச் சொட்டாய்
இரசாயனங்கள் இட்டு
பாரம்பரியங்களில் பட்டை சீவியதும்
பட்டுத்துணி செய்ய
பட்டம்பூச்சிகள் பலிகொடுப்பதும்..
இங்கேதான்!

விரல்பிடித்து நடக்கையிலே
விலங்கிட்டு நிறுத்தியதும்..
இறந்து இறந்து போகையிலே
சிறந்து போவேன் என்றதும்..
எழுந்து எழுந்து நிற்கையிலே
இயலாமை கண்டதும்..
புதுமை காண்கையிலே
புயல்களை அள்ளி வீசியதும் ..
பளிங்குகளை தந்துவிட்டு
முனைகளால் முதுகில் குத்தியதும்..
எந்தன் எறும்புக்கூட்டுக்குள்ளே
எரிகற்கள் நட்டு வைத்ததும்..
உயிர்துண்டுகள் கிழித்தென்னில்
ஊசியேற்றி ருசித்ததும்..
இவர்கள்தான்!

என்ன செய்வேன்..

காகிதக்கப்பலேறி
கடற்குழியில் விழுந்தேனோ ..
கல்லறை கண்டு கைகொட்டிச்
சிரித்தேனோ..
அக்கினிகுழம்பினுள்ளே ஆக்சிஜனுக்கு
ஆணையிட்டு நிறுத்தேனோ - நான்
ஆகாயம் கிழித்து அதில்
அவலட்சணம் செய்தேனோ..

போதும்!

இந்த மரக்கட்டைகளில்
மனித நரம்புகள் தேடியதும்..
மாவிலைகளில்
மஞ்சளரைத்துப் பூசியதும்..
குப்பைதொட்டிகளில் - நான்
பொக்கிஷங்கள் நட்டுவைத்ததும்..
முடிந்து போகட்டும்!

மயில் சிறகு கட்டி
மலையிலிருந்து குதித்தாலும்
மண் துகள்களுக்கு
மகரந்தம் கற்றுக்கொடுக்க
மாட்டேன்..
எனக்கும் தெரியும்
விண்மீன்களுக்கு
விஞ்ஞானக் கற்கள்
என்று சொல்ல!


-Irfan Zaruk

Read More »

ஒவ்வொரு தாயும் காதலித்தவள் தானே..

0 comments


வயிற்றுக்குள்ளே இதயம் சுமந்தவள்!

ஒரு காதலில் பிறந்தவனா நான்
ஒரு காதலாய் வளர்ந்தவனா நான்
ஒரு காதலின் சுயநலமா நான்
ஒரு காதலன் கண்ட
உயிருள்ள நிலவிலிருந்து உதித்தவனா நான்..
காதலுக்காய் நீ சுமந்த இதயத்தை
கடைசிவரை கண்டுகளிப்பதற்காகவா நான்..
உயிரிலும் மேலான உன்னவனுக்கு
நீ அளித்த தந்தை வரம்தானா நான்..

தாயே!

விண்தொட்ட  உன் காதலுக்காய்
இந்த மண்ணில்
உதிர்ந்து விழுந்து
நடமாடும் நடசத்திரம் நான் தானே..

கொள்ளைப்பாசம் அள்ளி
உனக்குள்ளே நான் வாழ
வருசமெல்லாம் வருத்தம்
சுமந்தவளே..
பிறந்து வருகையிலே -நான்
உன்னுடல் விட்டு பிரிந்து செல்கையிலே..
உயிர்துண்டு கிழித்தென்னில் ஒட்டி அனுப்பியவளே..
வாழ் நாளில்
வயிற்றுக்குள்ளே
இதயம்  சுமப்பவள் நீ தானே..

இந்த பிரபஞ்சம் கண்ட ஒவ்வொரு அன்னையெருக்கும்  என் வாழ்த்துகளோடு..

Read More »

வைரமுத்துவோடு நான் சோவியத்திற்கு..

1 comments

     வாசிப்பதற்கும்  எனக்கும் உள்ள தூரம் மருந்துக்கும் குழந்தைக்கும் உள்ள தூரத்திலும் அதிகமானது, எனினும் என்னைவிட அதிகமாய் புத்தகங்களை நான் நேசிப்பதுண்டு, குறைந்த பட்சமேனும் வாசிப்பதுண்டு.  நான் நேசிக்கும் புத்தகங்களில் இதுவரை வாசித்த புத்தகங்களுக்காகவே இந்த நூலகம். உங்களுடன்..

வைரமுத்துவோடு நான் சோவியத்திற்கு..

     முதன் முறையாக கவிப்பேரரசுடன் ஒரு வெளிநாட்டுப்பயணம் சென்றேன், அவரின் எழுத்துகளின்  ஊடான ஒரு பயணம்! அது சோவியத்தை நோக்கி.. அன்று கவிப்பேரரசின் மனசுக்குள் ஒரு பரவச நதி-கண்களை அகலப்படுத்திய ஒரு ஆச்சர்ய சந்தோசத்தை நான் உணர்ந்தது உண்மை. 
காரணம் 
சோவியத் என்பது ஒரு நாடல்ல பூமிப்பந்தில் அது இன்னொரு கிரகம். 
மௌனங்களால் அலங்கரிக்கப்பட்ட பூமியின் மற்றுமொரு கிரகம்,
மலர்களை மட்டுமே மந்திரங்களாக நம்பியிருக்கும் மாய பூமி அது..
தன்னைத்தானே தூசுதட்டிக்கொண்டிருக்கும் தூய்மையின் அந்தபுரம்..


அன்று அந்த கவிஞனின் கால்கள் சோவியத்தின் மண்ணில் பதிந்த போது,
"வைரமுத்து!
வாழ்கையின் மதிப்புமிக்க நிமிஷங்களில் 
வாழப்போகிறாய்;
உன் கண்களையும் காதுகளையும் 
எப்போதும் திறந்து வைத்திரு" என்று உள்மனதில் உயில் எழுதிக்கொண்டிருந்தார். 
சென்ற நோக்கம்  இந்தியக்கலை விழாவிற்கு விருந்தாளிகளாக. 
அனால் அங்கு கற்றுக்கொண்டதும்  உணர்ந்து முடிந்ததும் நிறையவே..

ரஷ்யாவின் அழகை விட அதன் வரலாறு ஆழமானது என்பதை புரிந்து கொண்டேன். 
இந்த பயணத்தில் கவிஞன் ரசித்த எத்தனையோ இடங்கள் இருக்கின்றன, கவிஞனின்  கண்ணீர் கசிந்த பொழுதுகளும் கணிந்திருக்கின்றன. 
ஒவ்வொரு இடங்களிலும் கவிஞனின் கண்கள் கொண்டு நான் கண்ட காட்ச்சிகளில் என்னை கவர்ந்தவற்றில் சிலவற்றை இங்கே உங்களுடன்..

பல்கலைக்கழக பாதையோரமாய் திருமணத்தம்பதிகளை கண்ட போது.. 
திருமணம் அங்கே 
இயல்பானது; எதார்த்தமானது;
வண்டு பூவில் தேனெடுப்பது போல் 
யாருக்கும் வலிக்காதது.
அங்கே எல்லா திருமணங்களுமே 
காதல் திருமணங்களே.

கலைவிழாவில்...
எந்தக் கலையும் 
முழுமையாய் அறியப்பட்டு 
நேசிக்கப்படுவதில்லை.

நிலா ஒரு கிரகம் என்பதையோ-
அது ஒரு பாலைவனம் என்பதையோ
அது பிச்சை வெளிச்சத்தில்தான் 
பிரகாசிக்கிறது என்பதையோ 
அறியாமலே கூட அது 
நேசத்திற்குரியதாய் இருக்க முடியுமல்லவா?

மின்ஸக் நகர் நோக்கி பயணிக்கையில்...
அவ்வளவு அழகையும் தூய்மையையும் 
ஒரு ரயில் பெட்டிக்குள் 
கம்பனின் மூளை கூட கற்பனை செய்துதர 
முடியாது..
படுக்கைகளில் மூன்றடி உயர மெத்தைகள்.
அதன்மேல் மல்லிகை பூவினும் 
மெல்லிய விரிப்பு.
மேகத்தை ஊதி அடைத்த 
இரண்டு தலையணைகள்.
கூந்தலைபோல் மிருதுவாக நெய்யப்பட்ட 
கம்பளிகள்.
கண்ணாடி ஜன்னலுக்கு 
குழந்தையின் கன்னத்தைபோன்ற 
மெல்லிய திரைகள்...

பாரதியின் மரண நிமிஷங்களை மொழிபெயர்த்து சொன்னபோது...
" பொழுது கருப்பாக விடிந்தது!
சூரியனின் மரணம் சொல்லிவிடப்பட்டது.
புயலின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
ஐயகோ!
நெருப்பை எரிக்க ஒரு மயானமோ
இறுதி  ஊர்வலத்தினரின் எண்ணிக்கை 
இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே!
மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்திரோ!
அவன் உடம்பில் மொய்த்த 
ஈக்களின் எண்ணிக்கையில் கூட 
ஆட்கள் இல்லையே!"

சர்கஸ் அரங்கில்..
"மனிதர்களை மிருகங்கள் மாதிரியும் 
மிருகங்களை மனிதர்கள் மாதிரியும் 
மாற்றிக்கட்டுவதே சர்கஸ் 
 அனுபவத்திற்க்குத்தான் .
இடமிருக்கிறதே தவிர ஆச்சர்யத்திற்கு இடமில்லை"

மின்ஸ்க்கின் அருங்காட்சியகம்..
அந்த அருங்காட்சியகத்தில் 
இத்தனை காட்ச்சிகளையும் 
இன்று மொத்தமாய் பார்த்திருந்தால் 
ஹிட்லர் கூட 
வெள்ளைப்புறா வளர்க்கவே  விரும்பியிருப்பார்.

இந்த பயணத்தில் கவிஞன் கற்றுகொண்டது ரஷ்யாவை.. மனித குலத்தை மங்காமல் பாதுகாக்கும் மகத்தான ஒரு பூமியை, நான் கற்க முயற்சித்தது கவிஞனை. இங்கே குறிக்கப்பட்டிருப்பதெல்லாம் ஒரு பெரும் விருட்சத்தின் அழகிய மலர்களை மட்டும் தான், அதன் கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆட விரும்பினாலோ, ஆணி வேரின் ஆழம் அறிய நினைத்தாலோ கவிஞரின் இந்த புத்தகத்தை படியுங்கள் ..

வடுகபட்டி முதல் வால்கா வரை 

இறுதியாக கவிஞர் இந்த பயணத்தில் இப்புத்தகம் பற்றி குறிப்பிடுகையில்..
வால்காவிலிருந்து 
ஒரு டம்ளர் நீர்தான் 
மொண்டுவந்தேன் 
இதோ 
ஊருக்கெல்லாம் 
ஒவ்வொரு சொட்டு.
                     வைரமுத்து..

**********************************************************************************************************************************************************


Read More »

நான்

2 comments


விரல்களின் முதற்பதிவில் என்னை  பதிவிட வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு 
இது இந்த  விரல்களுக்குத்தான் முதற் பதிவு என் விரல்களுக்கல்ல,
இது,
உங்களின் சில நிமிடங்களை சொந்தமாக்கிகொண்ட ஒரு சுயநல வாதியின் சுயம்புலம்பல்.



நான் ஒரு விஞ்ஞான மாணவன்- கலையுமானவன் 
எனது விஞ்ஞானம் கலையுடன் முளைத்தது 
எனது கலை விஞ்ஞானத்தில்  விளைந்தது..




       இர்பான் எனது இயற்பெயர், தம்பனூர் என்றழைக்கப்படும் தம்பாலையில் நானும் ஒருவன். உயர்தரத்தில் உயர்ந்த பெறுபேறு , அதனால் நிகழ்காலத்தில் கொஞ்சம் பிரபலம்.. (எங்க ஊர்ல மட்டும்தாங்க..) என் தொழிலியல் நோக்கம் ஒரு மருத்துவர் என்றாலும் என் மறுபக்கம் வெள்ளைக் காகிதங்கள் தான்.. அவற்றை அடிக்கடி நிரப்ப நினைப்பதுண்டு, அழகான ஓவியங்கள் வரைய முயல்வதுண்டு.. என் கற்பனைகள் மலையளவு என்றாலும், நான் செய்வது மண் துகள்கள் தான்.
        என் முதல் முயற்சி இதுவல்ல,முதல் அடி பல முறை வைத்தாலும் கலைகளுக்கு நான் பத்துமாத குழந்தைதான். எழுந்து நின்ற மறுகணமே விழுந்தும் விடுவேன். "எத்தனை ஆற்றல் தான் என்னுள் விதைக்கப்பட்டிருந்தாலும் காலம் கேட்கும் நிபந்தனைகள் நிறைவேறும் வரை அவை உறங்கு நிலையிலேதான்" என்ற மூட நம்பிக்கையை தகர்த்தெறிந்து இன்று எழுந்து நிற்கிறேன்-முடிந்தளவு.
நான் 
பார்ப்பவற்றைஎல்லாம் படைக்க நினைக்கும் ஒரு பேராசைக்காரன், இந்த உலகத்தை முடிவிலியாய் தேட நினைக்கும் ஒரு சோம்பேறி, பொக்கிஷங்களை பூட்டிவைத்திருக்கும் ஒரு தகரப்பெட்டி.. சில சமயங்களில் என்னை நானே புகழ்ந்து கொள்வதுண்டு, பல சமயங்களில் இகழ்ந்தும் கொள்வதுண்டு! நான் யார் என்பதை இருபத்தொரு வருடங்களாய்(நான் பிறந்ததிலிருந்து) தீர்மானித்துக் கொண்டிருக்கிறேன், இறக்கமுன்னர் அறிந்துகொள்ளவும் நினைக்கிறேன்..
        என் கனவுகள் எத்தனையோ, அவை  நான் தொலைத்துவிட்ட சிலம்பினுள் சிதறிப்போன முத்துகள். என் கிறுக்கல்களால் அவற்றை தேட முயற்சிக்கிறேன், என் பக்கங்களில் அவற்றை செதுக்க நினைக்கிறேன். என்னை அறியாத என் எழுத்துகளின் தூரம் எதுவரை என எனக்கு தெரியாது.. இருந்தும் எழுதுகிறேன் என் இறுதிவரை..
இது 
என்னில் இந்த உலகை செதுக்க பார்க்கும்-நான்!


irfan zarook

Read More »