நான்



விரல்களின் முதற்பதிவில் என்னை  பதிவிட வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு 
இது இந்த  விரல்களுக்குத்தான் முதற் பதிவு என் விரல்களுக்கல்ல,
இது,
உங்களின் சில நிமிடங்களை சொந்தமாக்கிகொண்ட ஒரு சுயநல வாதியின் சுயம்புலம்பல்.



நான் ஒரு விஞ்ஞான மாணவன்- கலையுமானவன் 
எனது விஞ்ஞானம் கலையுடன் முளைத்தது 
எனது கலை விஞ்ஞானத்தில்  விளைந்தது..




       இர்பான் எனது இயற்பெயர், தம்பனூர் என்றழைக்கப்படும் தம்பாலையில் நானும் ஒருவன். உயர்தரத்தில் உயர்ந்த பெறுபேறு , அதனால் நிகழ்காலத்தில் கொஞ்சம் பிரபலம்.. (எங்க ஊர்ல மட்டும்தாங்க..) என் தொழிலியல் நோக்கம் ஒரு மருத்துவர் என்றாலும் என் மறுபக்கம் வெள்ளைக் காகிதங்கள் தான்.. அவற்றை அடிக்கடி நிரப்ப நினைப்பதுண்டு, அழகான ஓவியங்கள் வரைய முயல்வதுண்டு.. என் கற்பனைகள் மலையளவு என்றாலும், நான் செய்வது மண் துகள்கள் தான்.
        என் முதல் முயற்சி இதுவல்ல,முதல் அடி பல முறை வைத்தாலும் கலைகளுக்கு நான் பத்துமாத குழந்தைதான். எழுந்து நின்ற மறுகணமே விழுந்தும் விடுவேன். "எத்தனை ஆற்றல் தான் என்னுள் விதைக்கப்பட்டிருந்தாலும் காலம் கேட்கும் நிபந்தனைகள் நிறைவேறும் வரை அவை உறங்கு நிலையிலேதான்" என்ற மூட நம்பிக்கையை தகர்த்தெறிந்து இன்று எழுந்து நிற்கிறேன்-முடிந்தளவு.
நான் 
பார்ப்பவற்றைஎல்லாம் படைக்க நினைக்கும் ஒரு பேராசைக்காரன், இந்த உலகத்தை முடிவிலியாய் தேட நினைக்கும் ஒரு சோம்பேறி, பொக்கிஷங்களை பூட்டிவைத்திருக்கும் ஒரு தகரப்பெட்டி.. சில சமயங்களில் என்னை நானே புகழ்ந்து கொள்வதுண்டு, பல சமயங்களில் இகழ்ந்தும் கொள்வதுண்டு! நான் யார் என்பதை இருபத்தொரு வருடங்களாய்(நான் பிறந்ததிலிருந்து) தீர்மானித்துக் கொண்டிருக்கிறேன், இறக்கமுன்னர் அறிந்துகொள்ளவும் நினைக்கிறேன்..
        என் கனவுகள் எத்தனையோ, அவை  நான் தொலைத்துவிட்ட சிலம்பினுள் சிதறிப்போன முத்துகள். என் கிறுக்கல்களால் அவற்றை தேட முயற்சிக்கிறேன், என் பக்கங்களில் அவற்றை செதுக்க நினைக்கிறேன். என்னை அறியாத என் எழுத்துகளின் தூரம் எதுவரை என எனக்கு தெரியாது.. இருந்தும் எழுதுகிறேன் என் இறுதிவரை..
இது 
என்னில் இந்த உலகை செதுக்க பார்க்கும்-நான்!


irfan zarook

2 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..